"(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் விவாதம் செய்வீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் நேர்வழி பெற்றவர்களையும் அறிவான்"
-திருக்குர்ஆன் 16:125
அழைப்புப் பணி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இந்த உத்தரவு நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல. அவர்களுக்குப் பின் மார்க்கத்தைப் பிறருக்கு எத்தி வைக்க கடமைப்பட்டுள்ள அனைத்து முஸ்லிம்களுக்குமான உத்தரவுதான் இது.
இன்று எத்தனை முஸ்லிம்கள் மற்றவர்களோடு விவாதம் செய்யும் அளவுக்கு நம் அறிவை வளர்த்திருக்கிறோம்? மற்றவர்களாக வலிய வந்து சந்தேகம் கேட்டால் கூட எனக்குத் தெரியாது என்று சொல்லி தப்பிக்கும் நிலையல்லவா இருக்கிறது பலரது நிலைமை!
சில வருடங்களுக்கு முன் ஹிந்து நாளிதழில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சித்திரம் வரையப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் கடும் கண்டனத்திற்குப் பிறகு வருத்தம் தெரிவித்துக் கொண்டது ஹிந்து நாளிதழ். இது தொடர்பாக சித்திரம் வரைந்த ஓவியரிடம் கேட்டபோது "என்னுடன் எத்தனையோ முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட இது போன்ற விஷயங்களை சொன்னதில்லை" என்று குற்றம் சுமத்தினார்.
மார்க்கத்தை மற்றவர்க்கு எத்தி வைக்காததின் விளைவுக்கான ஒரு சிறு உதாரணம் இது.
இவ்வுலகத்திலேயே நம்மீது குற்றஞ்சாட்டும் இவர்கள் மறுமையில் கேள்வி கணக்கு நாளில் அல்லாஹ்விடம் குற்றம் சுமத்தும் பொழுது நம்மால் பதில் சொல்ல இயலுமா?
மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்குத்தான் எத்தனையோ இயக்கங்களும் மாரக்க அறிஞர்களும் இருக்கின்றனரே நமக்கு என்ன வந்தது என்றிருக்காமல் நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனிலே இதற்கு ஓர் அழகிய உதாரணத்தைக் காணலாம்.
"சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா?"
-அல்குர்ஆன் 12:39
சிறையில் இருந்தபோது கூட நபி யூஸுப் (அலை) தன்னுடன் இருந்த தோழர்களுக்கு அறிவுப்பூர்வான கேள்வி கேட்டு ஏகத்துவத்தை எத்தி வைத்ததை அல்லாஹ் குறிப்பிடுகிறான். இப்படி நமக்கான எந்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் மார்க்கத்தை மிக அழகாக எடுத்துச் சொல்வார்கள் அல்லது தன்னை முஸ்லிமான கோலத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் அவரகள் செயல்களைப் பார்த்தால் இஸ்லாத்திற்கு நேர்மாற்றமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களால்தான் மற்றவர்களுக்கு தவறான மார்க்கமாக இஸ்லாம் பதிய வைக்கப்படுகிறது. இஸ்லாம் வாய்வழியாக பரவியதைவிட செயல் வழியாக பிறருக்கு எத்திவைக்கப்பட்டு அதன்மூலம் இஸ்லாத்தில் நுழைந்தவர்களே அதிகம் என்பது வரலாறு. இதையே அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்,
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் உள்ளவன்' என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்? (இருக்கின்றார்?)
-அல் குர்ஆன் - 41 : 33
அல்குர்ஆன் கூறுவது போல் சத்திய வார்த்தைகளாலும் அழகிய செயல்களாலும் மார்க்கத்தை பிறருக்கு கொண்டு செல்வோம். அழகிய முஸ்லிம்களாக வாழ்வோம்!
வல்ல இறைவன் இம்மை மறுமை வெற்றியை நமக்கு நல்குவானாக!
சனி, 18 ஜூன், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக